Monday, August 2, 2010
களவாணி - விமர்சனம்
கிராமத்து பின்னணி என்றாலே அருவாதான் மெயின் ரோல். என்று இருந்த தமிழ் சினிமாவின் பஞ்சாங்கத்தை உடைத்து அமைதியான ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் சற்குணத்திற்கு பாராட்டுகள். வித்தியாசமான படம் என்று சொல்வதை விட, படம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்ற படம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இரண்டரை மணி நேரத்தை அழகாக கடந்து செல்கிறது 'களவாணி' படம்.
பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் விமல், துபாயிலிருந்து அப்பா சம்பாதித்து அனுப்பும் பணத்தை அம்மாவை மிரட்டி வாங்கிக்கொண்டு குடி, கும்மாளம் என இருப்பதும், நண்பர்களோடு சேர்ந்து ஊர் சண்டை வாங்குவதையும் தனது தினசரி வேலையாக வைத்திருப்பவர்.
இந்த தினசரி வேலையில், தனது கிராமத்திற்கு ஆகாத கிரமாத்தில் இருந்து பள்ளிக்கு வரும் ஹுரோயின் ஓவியாவை சீண்டும் விமல், காலப்போக்கில் அவரையே காதலிக்கவும் செய்கிறார். ஓவியாவின் அண்ணன் திருமுருகன், விமலின் கிராமம் என்றாலே வெறுப்பவன். அதுவும் குறிப்பாக விமலை தன் எதிரியாக நினைத்துக்கொண்டிருக்கிறான். இந்த வேலையில் திருமுருகனின் அத்தை மகளை, விமலின் நண்பன் காதலிப்பதாகச் சொல்ல, குடிபோதையில் அந்த ஊருக்குள்ளே புகுந்து அந்த பெண்ணை தூக்கிகொண்டு வருகிறார்கள் விமலும், அவருடைய நண்பர்களும்.
இதனால் விமலின் மீது கோவம் கொள்ளும் திருமுருகன், விமலை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் துபாயில் இருந்து வரும் விமலின் தந்தை இளவரசு, விமலின் வில்லங்க தனத்தை பார்த்து கோவம்கொள்கிறார்.
அப்பாவின் கோவம், காதலியின் அண்ணனின் பகை இவற்றையெல்லாம சமாளித்து, காதலியை விமல் எப்படி கரம் பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் முடிவு.
ஒயின்சாப், ஊர் எல்லை என்று நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது, யாருக்கும் அடங்காமல் அடாவடித்தனம் பண்ணுவது என சுற்றும் ஹுரோ, என தமிழ் சினிமாவில் பார்த்த சமாச்சாரங்கள் தான் என்றாலும், அதை லாஜிக் மீறல்கள் இல்லாமல் கலகலப்பான காட்சிகளின் மூலம் படத்தை பார்க்க வைத்திருக்கிறான் இந்த களவாணி.
சீரியஸான காட்சிகளை கூட நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதை படத்தை தோய்வில்லாமல் நகர்த்துகிறது. விமல் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு கஞ்சா கருப்பை கலாய்க்கும் காட்சிகள் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
"இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு", என்று 'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமான விமல், இந்த படத்தின் பார்க்கும் பெண்களையெல்லாம் "என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு", என்று நையாண்டி மேளத்தை நன்றாகவே வாசித்திருக்கிறார். அதுவும் பஸ்டாண்டில் நின்றுகொண்டு இவர் பெண்களை ஜொல்லு விடுவதில் தனது லொல்லுதனத்தை சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி ஓவியா கிராமத்து பள்ளி மாணவி வேடத்திற்கு ஏற்றவாறு இருக்கிறார். பார்க்க அழகாக இருக்கும் ஓவியா, தனது முகபாவங்களின் மூலமும் தனது கதாபாத்திரத்திற்கு கனம் சேர்த்திருக்கிறார்.
மகன் மீது பாசம் வைத்திருக்கும் அம்மா வேடத்தில் சரண்யா, இவருடைய அம்மா வேலையை சரியாக செய்திருக்கிறார். அதுவும் விமலுக்கு பயந்து துபாயில் இருந்து வரும் பணத்தை மறைப்பது, அதே பிள்ளைக்காக மற்றவர்களிடம் பரிந்து பேசுவது என அசத்தி இருக்கிறார்.
விமலின் அப்பாவாக வரும் இளவரசு, கோவக்காரராக சித்தரித்திருக்கும் இவரின் கதாபாத்திரம் சில இடங்களில் காமெடி செய்து சிரிக்கவும் வைக்கிறது. பஞ்சாயத்து என்ற பெயரில் வரும் கஞ்சா கருப்பு, வரும் காட்சிகள் அனைத்திற்கும் திரையரங்கில் சிரிப்பு வெடி சத்தம்தான். நாயகியின் அண்ணனாக நடித்திருக்கும் இப்படத்தின் இணை இயக்குநர் திருமுருகனும் தன் பங்கிற்கு முத்திரை பதித்திருக்கிறார். இவரின் அறிமுக காட்சியிலேயே அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் இவர் நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்.
கிராமம் என்றாலே பெருசுகளின் வெட்டிப் பேச்சு, அருவா சண்டை என்றேல்லாம் இல்லாமல், கலகலப்பாக படத்தை நகர்த்தியிருக்கிறார் சற்குணம். அதுவும் இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், இரண்டு கிராமங்களை இணைக்கும் வயல்வெளி நடுவே செல்லும் சாலை, என அனைத்திலும் எதார்த்தத்தை கையாண்டுள்ளார்.
இரடை அர்த்தம் இல்லாத வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது இதற்காகவும் ஒரு முறை சற்குணத்தை பாராட்டலாம்.
நினைவில் நிற்காத பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் பின்னணி இசையில் பின்னியிருக்கிறார். காதை கிழிக்கும் சத்ததை தவிர்த்து, கதைக்கேற்ப அமைத்திருக்கும் பின்னணி இசை அருமை.
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் வயல்வெளி நிறைந்த தார் சாலை, அழகாக தெரிகிறது. சேஸிங் சீன்களிலும் இவருடையை கேமரா விளையாடியிருக்கிறது.
ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக ரசிகர்களின் மனதை களவாடுவான் இந்த 'களவாணி'