Monday, August 2, 2010
தில்லாலங்கடி - விமர்சன்ம்
இயக்குநர் 'ஜெயம்' ராஜா, நடிகர் 'ஜெயம்' ரவி என இந்த சகோதர்களின் தொடர் வெற்றி வரிசையில், 'கிக்' என்ற தெலுங்குப் படம் தமிழில் 'தில்லாலங்கடி' ஆக வெளிவந்து, வெற்றி கிக் அடித்திருக்கிறது.
எந்த செயல் செய்தாலும் அதை மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாக (சில நேரங்களில் மற்றவர்களுக்கு விபரீதமாகவும் இருக்கும்) செய்யும், ஒரு வித்தியாச பேர்வழியாக வரும் ஜெயம் ரவி, ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தாலும் அந்த வேலையில் கிக் இல்லையென்றால் அந்த வேலையை விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்றுவிடும் குணம் படைத்தவர்.
இப்படி அனைத்திலும் ஒருவிதமான கிக்கை தேடி அலையும் ரவியின் மனம், தமன்னாவிடம் காதல் வயப்படுகிறது. அந்த காதலையும் தன் கிக் விளையாட்டுடன் அனுகும் ரவி, தனது கிக்குக்காக எதையோ தேடி பயணிக்கும்போது காலம் அவரை வேறு ஒரு பாதைக்கு அழைத்து செல்கிறது. இந்த எதிர்பாராத திருப்புமுனைகளை தில்லாலங்கடி காட்சிகளாக்கி படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறார் இயக்குநர் ஜெயம் ராஜா.
காதல், ஆக்ஷன் என இருந்த ஜெயம் ரவி, இப்படத்தின் மூலம் காமெடியிலும் கலைகட்டுகிறார். தன் நண்பன் காதலிக்கும், எம்எல்ஏ நளினியின் மகளுக்கும், தனது நண்பனுக்கும் திருட்டு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யும் ரவி, அதே திருமணத்தை பற்றி தானே எம்எல்ஏவுக்கு போட்டுக்கொடுப்பது என அறிமுக காட்சியையே அமர்க்களப்படுத்தி இருக்கிறார். மற்றவர்களிடம் காட்டும் தனது தில்லாலங்கடித்தனத்தை தன் காதலிலும் காட்டி, ரசிகர்களை சோர்வடைய செய்யும் காதல் காட்சிகளுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்திருக்கிறார்.
அப்பாவி முகம், கோவமான ரியாக்ஷன் என தனது பாணியை இந்த படத்திலும் பின்பற்றியிருக்கிறார் தமன்னா, ஆனால் இந்த படத்தில் அவரை கொஞ்சம் அழகாக காட்டியிருக்கிறார்கள். அதற்கு அவரின் உடை வடிவமைப்பாளரையும், ஒளிப்பதிவாளரையும் பாராட்டியாக வேண்டும்.
தெலுங்கில் நடித்த அதே கதாபாத்திரத்தில் ஷாம், அதிர வைக்கும் காவல்துறை அதிகாரியாக படத்தில் களம் இறங்கும் இவரின் கதாபாத்திரத்திற்கு வேலை கொஞ்சம் என்றாலும் அதை சரியாக செய்திருக்கிறார். அலட்டல் இல்லாத இவரின் தேடுதல் வேட்டை படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இன்னும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
ரவியின் காதல் தில்லாலங்கடியில் சிக்கும் வடிவேலு, தமன்னாவை காதலிப்பதாக சொல்லி செய்யும் லூட்டி ரொம்ப பியூட்டி. தமன்னாவிற்காக தனது மனைவியை கொல்ல வடிவேலு தீட்டும் திட்டம் திகட்டாத இனிப்பு சிரிப்பாக அமைகிறது. இதற்கு நமுவில் சிரிப்பு போலீஸாக வரும் மன்சூரலிகானும் வடிவேலுடன் சேர்ந்து செய்யும் காமெடி திரையரங்கை இன்னும் கலகலப்பாக்குகிறது.
பழசெல்லாம் மறந்த நோயாளியாக வரும் சந்தானம், டாக்டராக வேஷம் போடுவதும், அவரின் பேஷண்டாக ரவி நடிப்பதும் என காமெடி நெடியை கொஞ்சம் தூக்கலாகவே தூவி விடுகிறார்கள். அதுவும் தலை பாகத்தை எக்ஸ்ரே எடுத்ததை, வருத்த வஞ்சீர மீனாக சித்தரிக்கும் சந்தானத்தின் மேனரிசம் வடிவேலுவின் காமெடியுடன் போட்டி போடுகிறது. கஞ்சா கருப்பிற்கு இந்த படத்தில் கெளரவ வேடம் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு மட்டும் அவரை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
காவல்நிலையத்தில் ரவியும் அவரது தந்தை பிரபுவும் செய்யும் ரகளை எதிர்பார்க்காதது என்றால். அப்பாவும், மகனும் குடித்து விட்டு போதையில் வர அவர்களுக்கு மறுபடியும் ஒரு பெக்கை ஊற்றிக்கொடுக்கும் அம்மா சுஹாசினியின் காட்சி இன்னும் கவர்கிறது.
கமர்ஷியல் படமாக இருந்தாலும், "சொல்பேச்சு கேட்காத சுந்தரியே..." என்ற பாடலின் மூலம் தன்னை ஒரு தொழில்நுட்ப இயக்குநராகவும் ராஜா நிருபித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.ராஜாசேகரையும் பாராட்டியாக வேண்டும். காமெடி கலாட்டாவில் யுவன்சங்கர் ராஜாவின் காதல் பாடல்களில், இரண்டு மட்டுமே தேர்கிறது.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்களிடம் இருந்து எடுத்து கொடுக்கும் ஒரு ஹுரோ. இது தமிழ் சினிமாவில் பார்த்ததுதான் என்றாலும், அதை தன் திரைக்கதையின் மூலம் மறுபடியும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜா. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பையும், காமெடியையும் கலந்து அடிக்கும் ராஜாவின் திரைக்கதை ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.
லாஜிக்கை பார்க்காமல் இரண்டரை மணி நேரத்தை சிரித்து செலவழிக்க வேண்டும் என்றால் 'தில்லாலங்கடி' ஓடும் திரையரங்குகளுக்கு கண்டிப்பாக நாம் ஓடலாம்.
'தில்லாலங்கடி' - திகட்டாத சிரிப்பு