Tuesday, June 1, 2010
சிங்கம் - விமர்சனம்
தமிழ் சினிமா ரசிகர்களை கடைந்தெடுத்த முட்டாள்கள் என்று முடிவு கட்டிக் கொண்டே எடுக்கிறார்களோ என்று எண்ண வைத்துள்ள படங்களில், சுறாவுக்கு அடுத்த இடத்தைப் பிடிக்கிறது சிங்கம். திருநெல்வேலிக்குப் பக்கத்தில் நல்லூர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சூர்யா. அக்மார்க் நேர்மையாளர். இவருக்காக ஊர்க்காரர்கள் உயிரையே விடுவார்களாம்.
சென்னையில் பெரிய தாதாவான பிரகாஷ்ராஜுக்கு ஒரு ரியல் எஸ்டேட் விவகாரத்தில் நல்லூர் சப் இன்ஸ்பெக்டரோடு மோதல் ஏற்பட, அது பகையாக மாறுகிறது.
அடுத்தகட்ட பழிவாங்கலுக்காக, சப் இன்ஸ்பெக்டர் சூர்யாவை, இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தி, தான் வசிக்கும் திருவான்மியூர் ஏரியாவுக்கே மாற்றல் செய்ய வைக்கிறார் பிரகாஷ்ராஜ்.
எல்லா ஹரி படங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் வெள்ளை வேஷ்டி வில்லன்கள், ஆகாயத்தில் பறக்கும் டாடா சுமோக்கள், திருநெல்வேலி லொகேஷன்கள் இந்தப் படத்திலும் உண்டு.
சூர்யாவுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாத பாத்திரம். எதற்கெடுத்தாலும் கத்திக் கத்தி வசனம் பேசி கழுத்தறுக்கிறார். இந்த பஞ்சர் டயலாக்குகளுக்கு யாராவது நிரந்தரத் தடை போட்டால்கூட புண்ணியமாகப் போகும்.
இவர் அடித்தால் வில்லன்கள் பறக்கிறார்கள்... டாடா சுமோ கூட பறக்கிறது... தாங்க முடியல.
இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல் அனுஷ்காதான். பார்க்க படுகுளிர்ச்சியாக வரும் இவர், பல காட்சிகளில், 'அட பரவாயில்லையே' என்று சொல்லுமளவுக்கு நடித்துமிருக்கிறார். ஆனால் சூர்யாவுடன் சேர்த்துப் பார்க்கும்போது பொருந்தவில்லை. இருவருக்கும் உள்ள உயரப் பிரச்சினை பாடல் காட்சிகளில் பளிச்சென்று தெரிகிறது.
பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் பார்த்துச் சலித்த சமாச்சாரம். புதுசா ஏதாவது பண்ணுங்க செல்லம்...!
ஏட்டு எரிமலையாக வரும் விவேக் மெகா எரிச்சல்.
மற்றபடி நாசர், விஜயகுமார், மனோரமா, நிழல்கள் ரவி போன்றவர்களும் வந்து போகிறார்கள். ஆனால் போஸ் வெங்கட் மனதில் நிற்கிறார்.
ஹரியின் படத்துக்கு என்ன தேவை என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரியன். தேவி ஸ்ரீ பிரசாதின் இசை சுமார்தான். 'ஸ்டோல் மை ஹார்ட்..' இதயங்களைத் திருடிக் கொள்கிறது. பின்னணி் இசை ஆளைக் கொல்கிறது!
எடிட்டர் விடி விஜயன் படம் பார்க்கும் போதே தூங்கிவிட்டார் போல. காட்சிகள் தொடர்பில்லாமல் எகிறுகின்றன சில இடங்களில்.
ஹரியிடம் ஒரு பாரதிராஜாவையோ பாலாவையோ நாம் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் மசாலா படங்களையே தாராளமாகத் தரட்டும். ஆனால் குறைந்தபட்ச நம்பகத் தன்மையுடன் அதைத் தாருங்கள் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.
சிங்கம் என்று சொல்லத்தான் ஆசை... ஆனால் பிடரியில் முடியிருப்பதையெல்லாம் சிங்கமென்று ஒப்புக் கொள்ள முடியுமா என்ன...!