Tuesday, June 1, 2010
பையா - விமர்சனம்
ஒரு சின்ன தகராறில் கார்த்தியை சுற்றும் ஹிந்திக்கார வில்லன் குரூப், ஹீரோயினை அடாவடியாய் திருமணம் செய்ய சுற்றும் தெலுங்கு வில்லன் குரூப், என இரண்டு வில்லன் குரூப்புகளிடமிருந்து கார்த்திக் எப்படி தமன்னாவை காப்பாற்றி, பாம்பேயில் உள்ள தமன்னாவின் பாட்டி வீட்டில் கொண்டு சேர்க்கிறார் என்பதும், இதற்கிடையில் இவ்ர்களுக்கிடையில் காதல் மலர்ந்ததா என்பதும்தான் பையாவின் மீதிக்கதை.
தலைக்கு மேலை கையை கட்டிக்கொண்டு நடப்பது, நடனம், டயலாக் டெலிவரி என கார்த்தி இன்னும் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவனில் இருந்து வெளிவரவில்லை போலும். என்னதான் கார்த்தியை அழகாக காட்டினாலும் அவரிடம் ஒரு லோக்கல் வாசனை இன்னும் வீசிக்கொண்டேதான் இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் கார்த்தியின் அர்ப்பணிப்பு தெரிகிறது. தமன்னா தன் காரில் பாம்பே வரை வரப்போகிறார் என தெரிந்தவுடன் அவரிடம் ஏற்படும் பிரமிப்பு, சந்தோஷம், பாம்பேயில் தமன்னாவை பிரிந்தவுடன் அவரது நடிப்பு என சில இடங்களில் கைத்தட்ட வைக்கிறார். கார்த்தியின் தோழியாக வரும் சோனியா தீப்தி தமிழுக்கு ஒரு நல்வரவு.
வழக்கமான தமிழ்சினிமா ஹீரோயின் என்ன செய்வாறோ, அதையெல்லாம் பார்முலா படி செய்திருக்கிறார் தமன்னா. ஸ்டெயிலாக காரை ஓட்டியபடி கார்த்தி முன் வந்து நிற்கும் காட்சியில் “அட” போட வைக்கிறார். தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படி ஒரு அமெச்சூர்தனமான, படு செயற்கையான நண்பர்கள் வட்டத்தை பார்த்திருக்கவே முடியாது. என்ன ஆச்சு லிங்குசாமிக்கு? வில்லன் குரூப்பில் இருந்து வரும் முதல் ஆள் ஹீரோவின் கையால் ஒரு அடி வாங்கியவுடன் கீழே நிலைகுலைந்து விழவேண்டும், வில்லன் குரூப்பில் ஊனமான ஒரு அடியாள் இருக்கவேண்டும், பெயர்கள் உட்பட(சிவா, ப்ரியா) என, தனது முந்தைய படங்களின் சக்ஸஸ் ஃபார்முலாவை (செண்டிமெண்ட்?) திரும்ப திரும்ப பயன் படுத்தி இருப்பது லிங்குசாமியின் திறமை மீது கேள்விக்குறி எழுப்புகிறது. குடையை மறைத்தபடி வில்லன்களிடமிருந்து தப்பிப்பது, ரிவர்ஸிலேயே காரை ஓட்டுவது, போன்ற இடங்களில் லிங்குசாமித்தனம் தெரிகிறது
மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஊட்டச்சத்து. அதுவும் குறிப்பாய் “சுத்துதே சுத்துதே” பாடலில் கேமரா கவிதை எழுதி இருக்கிறது. படத்தின் நிஜமான ஹீரோ இரண்டு பேர். ஒருவர் யுவன்ஷங்கர் ராஜா, அத்தனை பாடல்களும் தேன். இசையால் சீட்டைவிட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறார். பின்னணி இசை சில இடங்களில் தடுமாறினாலும் அத்தனை குறைகளையும் பாடல்களால் மறைத்துவிடுகிறார்
இன்னொரு ஹீரோ ஆண்டனி. டைட்டில் கார்ட் போடுவதில் தொடங்கி, இறுதிவரை அசுரப்பாய்ச்சல் பாய்ந்திருக்கிறார் மனுஷன். இண்டர்வெல் கார்ட் போடும்போது ஆண்டனி கொடுத்திருக்கும் கிரியேட்டிவிட்டி அற்புதம். வெல்டன் ஆண்டனி. இறுதிவரை கார்த்தி தன் வாயால் ஹீரோயினிடம் காதலை சொல்லவில்லை என்பது மட்டுமே புதுமை. ஒன்லைனாக சொல்லப்படும் போது இருக்கும் சுவாரஸ்யம், திரைக்கதையில் இல்லாதது பையாவின் பயணத்திற்கு வேகத்தடையாக இருக்கிறது.