அஜித்தின் 49 வது திரைப்படம்.
நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பின்னர் இன்று திரை கண்டுள்ளது.
இயக்கம் சரண். அஜித்தை வைத்து காதல் மன்னன்,அமர்க்களம் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
இசை சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ்.
தயாரிப்பு சிவாஜி பில்ம்ஸ்.
அல்டிமேட் ஸ்டார் பட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் என்று அஜித் சொன்னதால்,வழமையான சரவெடிகளின்றி சட்டென்று எழுத்தோட்டத்துடன் படம் ஆரம்பிக்கிறது.
அதிலேயே பெரிய பரபரப்பில்லாத ஆச்சரியங்கள்..
இணை இயக்குனர் - அஜித்.. (ஆமாங்க தலையே தான்)
இப்போ இணை இயக்குனர்.. அடுத்த கட்டாமாக இயக்குனர் அவதாரம் எப்போது?அரை சதத்திலா?அது முடிந்த பிறகா?
கதை,திரைக்கதை,வசனம் - அஜித், சரண், யூகிசேது கூட்டணி..
சண்டைக்காட்சிகளுக்காக நான்கு வெவ்வேறு சண்டைப் பயிற்றுனர்கள்..
இதில் இருவர் வெளிநாட்டவர்கள்..
ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்புக்கமைய சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருப்பதோடு நீட்டி அலுப்படிக்கவில்லை என்பது ஆறுதலும், புதுமையும் கூட.
கொஞ்சம் (கொஞ்சமே தான்)பழகிய,பழைய கதை தான்..அதிலே கொஞ்சம் வித்தியாசம்..
மிகப்பெரிய வியாபாரக்கார,பணக்காரத் தந்தை..(அதுவும் அஜித்தே தான்.. இரட்டை வேடம்)
அவருக்கு இருக்கும் மூன்று பையன்களில் ஒருவர் (இளைய தல) இரண்டாவது தரம் வழி பிறந்தவர்.
இதனால் சகோதர சண்டை.சொத்துக்காக நடக்கும் மோதலில் ஜெயிப்பவர் யார் என்பதே சிறிய கதை..
பாடல்களை வைத்துக் கொண்டும்,இரண்டு கதாநாயகிகள் என்பதை மனதில் கொண்டும் சிலர் கண்மூடித் தனமாக ஊகித்துக் கொண்டது போல இது முன்னைய சிவாஜியின் 'புதிய பறவை'இனதோ, வேறு எந்தப் புண்ணாக்குப் பறவையினதோ ரீமேக் இல்லை.
ஆனால் எடுக்கப்பட்ட களம்,விதம் ஆகியனவற்றால் 'அசல்' அசத்துகிறது.
படத்தின் பெரும்பாலான என்பதை விட முழுமையாகவே பிரான்சிலும்,மலேசியா,தாய்லாந்திலும் எடுத்திருக்கிறார்கள்.
பில்லாவுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் தொற்றியுள்ள ஸ்டைலிஷ் படமாக்கல் அசலிலும் தொடர்கிறது.
சிவாஜி நடித்த ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் திரைப்படத்துக்குப் பிறகு அசலே பிரான்ஸ் மண்ணில் நீண்ட காட்சிகள் வரும் படம் என நினைக்கிறேன்.
பிரசாந்த் என்ற புதுமுக ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் படமெங்கும் குளுமை..
பல காட்சிகளில் அன்டனியின் படத்தொகுப்பும்,ஒளிப்பதிவும் சேர்ந்துகொண்டு படத்தோடு எம்மை ஒன்றிக்க செய்கிறது.
நடிக,நடிகையர்
அஜித் இரட்டை வேடம்..
அஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.
எந்தவொரு பஞ்ச வசனமும் இல்லை.
ஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்.ஆனால் அவையும் ரசிக்கக் கூடியதாகவே உள்ளன.யூகி-அஜித்-சரண் கூட்டணியின் பொறுமையான உழைப்பு தெரிகிறது.
எந்த கெட் அப்பாக இருந்தாலும் அந்த நளினமும் கம்பீரமும் அஜீத்துக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்துவது தமிழில் அரிது.. (கமல்,அர்ஜுன்,சூர்யா மற்றையவர்கள்)
மீசை,தாடி,கலரிங்,ஸ்பைக் செய்யப்பட்ட முடி என்று மனிதர் மிரட்டுகிறார்.
அவரது ஆடை வடிமைப்பில் செலுத்தப்பட்டுள்ள கவனமும்,நேர்த்தியும் அருமை.
தனது குறைபாடுகள் என்று விமர்சிக்கப்பட்ட விஷயங்களை சீர் செய்துகொள்ள அஜித் முயற்சி எடுத்துள்ளார்.
குரல்,நடனம்...
எனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.
கதாநாயகிகளாக மிக நவ நாகரிக நங்கையாக ஷமீரா ஷெட்டியும்(ஜேம்ஸ் பொன்ட் அறிமுகப்பாடல் போல வரும் 'அசல்' பாடலும், குதிரைக்குத் தெரியும் பாடலும் அம்மணியின் கவர்ச்சியால் மினுங்குதுங்கோவ்),ஓரளவு நவ நாகரிக நங்கையாக மெலிந்து,கொஞ்சம் பொலிவாகியுள்ள பாவனாவும்.
சித்திரம் பேசுதடியில் படத்துக்குப் பிறகு பாவனா இதிலே தான் அழகாகத் தெரிகிறார்.பாடல் காட்சிகளில் முன்னெப்போதும் இல்லாத கவர்ச்சியும் தெளிக்கிறார்.
ஷமீரா ஒரு குதிரை தான்.சில உடைகளில் கவர்ச்சியும் வேறு சில உடைகளில் ஒரு பொறுப்பான கம்பீரமும் வருகின்றன.
வில்லன்களாக ஒரு நீண்ட பட்டாளம்..
சம்பத் - மிரட்டுகிறார்,ஆனால் இன்னும் கொஞ்சம் உணர்ந்து நடிக்க முயற்சி செய்யலாம்..
ராஜீவ் கிருஷ்ணா - ஒரு அழகான கதாநாயகன் இன்று அழகான வில்லனாகியுள்ளார்.கொஞ்சம் சைக்கோத் தனமான ஒரு பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.
பழைய ஹீரோ சுரேஷ் மொட்டைத் தலையுடன் பிரான்ஸ் நாட்டுப் போலீஸ் ஆனால் வில்லனாக..
கஜினி வில்லன் பிரதீப் ராவத்..இவர் தான் சகுனி..மற்ற எல்லா வில்லன்களையும் ஆட்டுவது இவர் தான்.
இவர்களோடு ஷெட்டியாக மும்பை தாதாவாக ஒரு வில்லன்.பெயர் ஞாபகத்தில் இல்லை.மனிதர் அசத்தி இருக்கிறார்.சிம்பிளாக மிரட்டுகிறார்.ஸ்டைலாகவும் இருக்கிறார்.
ஆனால் இவரை சுற்றி உள்ள அடியாட்கள் எல்லோரிலும் அந்நிய வாசனை அடிப்பது தான் கொஞ்சம் ஓவர்.
தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரபுக்கு வந்து போகின்ற ஒரு வேடம். சொல்வதற்கு ஏதுமில்லை.
படத்தின் பின்னணியில் உழைத்த யூகி சேதுவுக்கு - பாத்திரப் பெயர் டொன் சம்சா சிரிக்க வைக்கும் பாத்திரம்.தன்னால் முயன்றவரை சிரிக்கவைக்கப் பார்த்துள்ளார்.நகைச்சுவை படத்தின் கதையோட்டத்துக்கு தேவைப்படாவிட்டால் முற்றாகவே தவிர்த்திருக்கலாம்.
கவர்ச்சியை படத்தில் ஆங்காங்கே தெளித்துவிட்டுள்ளார் சரண்.
வெளிநாட்டுப் படப்பிடிப்பும்,காட்சிகளின் பிரமாண்டங்களும் செல்வச் செழுமையைக் காட்டுகின்றன.தயாரிப்பாளர் வாழ்க.
சரணின் வழமையான ஆங்கிலப் பாணியிலான காட்சியமைப்புக்களும், சுவாரஸ்யமான,சாதுரியமான காட்சி நகர்த்தல்கள் ரசிக்கவைக்கின்றன.
எங்கே பாடல் படத்தில் இல்லை. அசல்,குதிரை பாடல்கள் குருக்கப்பட்டுள்ளன. இதனால் பாடல் காட்சிகளால் படம் தொய்வடையவில்லை.
துஷ்யந்தா,டொட்டடொயிங் பாடல்கள் இப்போதே ஹிட்.. இனி மேலும் ஹிட் ஆகலாம்.. பாடல்கள் எடுக்கப்பட்ட விதத்தில் குறைவைக்கவில்லை.
எனினும் இடைவேளைக்கு முன்பே ஒரு வில்லனின் கதையை அஜித் டக்கென்று முடித்துவிடுவதால்,இடைவேளையின் பின்னர் கொஞ்சம் படம் வேகம் குறைவதை இயக்குனர் கவனித்திருக்கலாம்.
பரத்வாஜ் பாடல்களை ஆகா ஓகோவென்று தராவிட்டாலும்,படத்தோடு பாடல்கள் அருமையாகவே இருக்கின்றன.பின்னணி இசையிலும் மனிதர் கலக்கி இருக்கிறார்.சரண் இவரை நம்பி தொடர்ந்து கூட்டணி அமைக்கலாம்.
படத்தில் விசேடமாக நான் கவனித்தவை..
சண்டைக் காட்சிகள் அளவுக்கதிகமாக நீட்டப்படாமை.
யாரையும் குத்தாத வசனங்கள்..
அளவான வசனங்கள்..
ஸ்டைலிஷ் costumes எல்லோருக்கும்..
நிரம்பலான பாத்திர பகிர்வு..(பிரபுவின் சைஸை வைத்து சொல்லவில்லை)
அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.ஆனால் அது ஓவரானதாக இல்லை.அவரின் பாத்திரப் படைப்பை சரண் கவனமாகக் கையாண்டுள்ளார்.நல்ல காலம் பில்லாவுக்குப் பிறகு அஜித் பேசுவதைக் குறைத்துக் கொண்டது.
அஜித்தின் பாத்திரத்தின் கனதியைப் பேண சரண் குழுவினர் எடுத்த சிரத்தை அருமை.இதனாலேயே படத்தில் அஜித் வில்லன்களை லாவகமாகப் பந்தாடும்போது ரசிக்கமுடிகிறது.
வழமையான 'தல' மசாலா,,
பார்க்கலாம்..ரசிக்கலாம்..
ஏகனுக்குப் பிறகு ஏக்கத்துடன் இருந்த அஜித்துக்கு ஆறுதல் இந்த 'அசல்'..
அசல் - அஜித்தின் அசத்தல்..
Source : http://loshan-loshan.blogspot.com/2010/02/blog-post_05.html