தமிழில் மகாநதி, முதல்வன், லேசா லேசா, பொய் சொல்லப் போறோம், வேட்டைக்காரன் ஆகிய படங்களில் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் மலையாள நடிகர் கொச்சின் ஹனிபா. இவரது இயற்பெயர் சலீம் அகமது ஹவுஸ். மேடை நாடகம் ஒன்றில் ஹனிபா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் அப்பெயர் பெற்றார். இவருக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பதாக அறிந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான எர்ணாகுளம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சென்ட்ரல் ஜும்மா மசூதியில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இவருக்கு பாஜிலா என்ற மனைவியும், ஷர்பா, மர்வா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
மறைந்த ஹனிபா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் தமிழில் 6 படங்களையும், மலையாளத்தில் 7 படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.