எதார்த்தமான சம்பவங்களை வைத்து படம் பண்ணி நம்மை ரசிக்கவும், சிரிக்கவும் வைத்த வெங்கட் பிரபுவின் அடுத்த படம். ஆக்கர் பிக்சர் புரொடக்சன் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த முதல் படம். ஜெய், பிரேம்ஜி, வைபவ், ஸ்னேகா, சம்பத், அரவிந்த், பியா, ஆகாஷ் முதலியோர் கோவாவில் அடிக்கும் லூட்டிதான் படம். இதில் கௌரவட வேடங்களில் சிம்பு நயன்தாரா ஜோடி வேறு.
மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமத்தின் கோவிலில் சாமிப் பிள்ளையாக கருதப்படும் பிரேம்ஜியின் நடிப்பில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவருடைய நண்பர்களாக ஜெய், வைபவ். இந்த மூவருக்கும் கிராமத்தில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை. அதனால் பக்கத்தில் உள்ள நகரமான மதுரைக்கு ஓடிப் போகிறார்கள். அங்கு போனால்தான் தெரிகிறது பிரேம்ஜி கோவில் நகைகளை திருடி வந்திருக்கிறார் என்று. திரும்பவும் ஊருக்கு போக முடியாத நிலை. தற்செயலாக அவர்களது நண்பரான கல்லூரி காமாட்சிக்கும் பாரின் பிகரான ஏஞ்சலினா ஜோலிக்கும் நடந்த திருமணத்தை நினைத்து பொறாமை கொள்கிறார்கள். காமாட்சி அந்த பிகரை கோவாவில்தான் கைப்பிடித்தான் என்றதும், நாமும் கோவா சென்றால் நம் வாழ்க்கைத் தரமே மாறிவிடும் என்று நினைத்து மூவரும் எதாவது பாரின் பிகரை கரெக்ட் செய்யும் சபதத்தோடு கோவா செல்கிறார்கள். அங்கு சந்திக்கும் அரவிந்த் ஆகாஷ், சம்பத், பியா, ஸ்னேகா ஆகியோருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிதான் படம்.
படத்தில் ஆங்காங்கே வரும் காமெடி பட்டையைக் கிளப்புது. பிரேம்ஜி கண்கள் இரண்டால் பாடலை பாடி பிகரை கரெக்ட் செய்யும் காட்சியில் கலக்குகிறார். பியா முக பாவனைகளில் நம்மைக் கவர்கிறார். பின்னணி இசையில் யுவன் கலக்குகிறார். சக்தி சரவணின் ஒளிப்பதிவு ஓ.கே. கிளைமாக்ஸ் காட்சியில் சிம்பு, நயன்தாராவை வரவழைத்திருப்பது நல்ல வரவேற்பு.
மேலும் படத்தின் கதை பெரும்பாலும் பிரேம்ஜியை மட்டுமே நம்பி இருக்கிறது. திரைக்கதையை ரொம்பவும் இழுவையாக சொல்லியிருக்கிறார். பிரேம்ஜியின் காதல் காட்சிகளைத் தவிர்த்து வேறு எந்தக் காதல் காட்சிகளையும் ரசிக்க முடியவில்லை.
கதையின் ஓட்டம் மிகவும் எதார்த்தமாக இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.