காதலை ஃபீல் பண்ணினா போதும் லவ் பண்ண வேண்டாம் என்ற தத்துவத்தோடு வெளிவந்திருக்கும் குட்டி தெலுங்கில் ஆர்யா என்ற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்தான் என்றாலும், தமிழுக்காக நிறையவே மாற்றங்கள் செய்திருக்கிறார் இயக்குனர் ஜவஹர்.
கல்லூரியில் ரவுடியிசம் செய்து அனைவரையும் மிரட்டி வைத்திருக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ராதாரவியின் மகன் தயான் கல்லூரிக்கு புதிதாக வரும் ஸ்ரேயாவை காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் ஸ்ரேயா தனது காதலை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக மிரட்டுகிறார் தயான். பயந்து போகும் ஸ்ரேயா அவர் காதலை ஏற்றுக் கொள்கிறார். அப்போது அதே கல்லூரியில் படிக்க வரும் தனுஷ் ஸ்ரேயா மீது ஒருதலைக் காதல் கொள்கிறார். இதை அறிந்த தயான் தனுஷை எச்சரிக்கிறார். அதற்கு நான் காதல் செய்வது எனது தனிப்பட்ட விஷயம் அதில் நீ தலையிடாதே. உங்கள் காதலுக்கு நடுவே நான் வரமாட்டேன். உங்கள் காதல் மேல் நம்பிக்கை இருந்தால் என் வழியில் வரக்கூடாது என்கிறார் தனுஷ்.
தயானின் அப்பா அவர்களின் காதலை ஏற்க மறுக்கிறார். காதலியின் காதலை சேர்த்து வைக்கப் போராடுகிறார் தனுஷ். இறுதியில் ஸ்ரேயா தனுஷுடன் சேர்ந்தாரா? தயானுடன் சேர்ந்தார் என்பதே கிளைமாக்ஸ்.
துறு துறு காலேஜ் பையனாக காமெடி கலந்த கேரக்டரில் நடித்திருக்கிறார் தனுஷ். கல்லூரி மாணவன் வேடத்தில் கனகச்சிதமாய் பொருந்தியிருக்கிறார். தனது காதலை ஸ்ரேயா புரிந்து கொள்ளவில்லையே என்று குமுறும் போது நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். தனுஷின் காதலை ஏற்பதா இல்லையா என தவிக்கும் காட்சியில் ஸ்ரேயா நம் மனதைத் தொட்டுச் செல்கிறார். முதன்முதலாக கவர்ச்சியே இல்லாமல் புத்தம் புது ஸ்ரேயாவாக வந்து செல்கிறார்.
தனுஷ் காதலுக்கு வில்லன் தயான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அவரது அப்பா ராதாரவி திடீரென விஸ்வரூபம் எடுப்பது படத்தில் மிகப்பெரிய திருப்பம். படத்தில் ஸ்ரேயாவிற்கு அப்பா, அம்மா என்ன செய்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள், அவருக்கு பேமிலி இருக்கிறதா என்பதைச் சொல்லாதது மிகப்பெரிய மைனஸ்.
ஒளிப்பதிவு சொல்லும் படி ஏதும் இல்லை. இசையில் தேவிஸ்ரீபிரசாத் வழக்கம் போல வெளுத்து வாங்கியிருக்கிறார். காமெடியென்று படத்தில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தளபதி தினேஷ் ஆக்சன் காட்சிகளில் தடலாடி கொடுத்திருக்கிறார்.
வின்சென்ட் அசோகனை தனுஷ் தாக்கியதும் படம் முடிந்து விட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் கிளைமாக்ஸுக்காக காட்சிகளை இழு இழுவென்று இழுத்திருக்கிறார்கள்.