Monday, February 8, 2010
தமிழ் படம் - விமர்சனம்
காலம் காலமாக தமிழில் பார்த்து வரும் ஒரே மாதிரி படங்களை காட்சிக்கு காட்சி கலாய்க்கும் படமிது. ‘கருத்தம்மா’வின் பெண் சிசு கொலையின் பாதிப்பில் முதல் காட்சி தொடங்குகிறது. அதில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால், இதில் ஆண் குழந்தைக்கு கள்ளிப்பால். முதல் சீனே முழுபடமும் எந்த கோணத்தில் போகப்போகிறது என்று மேப் போட்டு காட்டுகிறது. ரவுடிகள் செய்யும் அட்டகாசத்தை பார்த்துவிட்டு ஓடி வரும் சிறுவன் பாட்டியிடம் புகார் சொல்ல, ‘நீ பெரியவனா ஆகணும்னா அந்த சைக்கிள் பெடலை சுத்து’ என்று சொல்கிறார். சிறுவனும் சைக்கிள் பெடலை சுற்றி சில நொடிகளிலேயே பெரியவனாகிறான். அராஜகம் செய்து கொண்டிருக்கும் ரவுடிகள் இடத்துக்கு வந்து அவர்களை நையப்புடைக்கும்போது அத்தனை ஆக்ஷன் ஹீரோக்களையும் விளாசுகிறார்.
ஹீரோயின் திஷா பாண்டேவுடன் ஷிவாவுக்கு காதல் மலர்ந்ததும் பாடும் ‘ஓ மகசியா..’ செம லொள்ளு. தமிழ் பாடல்களில் வரும் ஹம்மிங்கையே தேடிப்பிடித்து முழுபாடலாக்கி இருக்கிறார்கள்.
பசுமாடு அருகில் நிற்கும் ராமராஜன் சிலை, பொட்டல்காட்டில் வாழை இலையில் சோற்றை கொட்டிக்கொண்டு எலும்பு கடிக்கும் ராஜ்கிரண் நையாண்டி, ‘பஞ்சாயத்துக்கு கட்டுப்படலேன்னா அந்த விரல் தம்பியோட படத்தை நூறுமுறை போட்டுக்காட்டிடுவேன்’ என்று பயமுறுத்தும் பொன்னம்பலத்தின் நாட்டாமை நையாண்டி என அடுக்கடுக்காக ஒட்டுமொத்த ஹீரோக்களையும் கலாய்த்திருப்பது நான் ஸ்டாப் காமெடி. கிளைமாக்ஸில் புது வில்லன் வருவார் என்று ஆவலாக பார்க்கும்போது பரவை முனியம்மாதான் ரவுடி கூட்டத்துக்கு தலைவி என்று காட்டுவது ஹைலைட் காமெடி. கோர்ட்டில் சில விநாடிகளில் வழக்கை விசாரிக்கும் நீதிபதி வி.எஸ்.ராகவன், ‘தீர்ப்பை வரும் 26ம் தேதி ஒத்திவைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் என் அக்கா வீட்டில் பங்ஷன் இருப்பதால் இப்பவே தீர்ப்பு சொல்லிவிடுகிறேன்’என அவசர அவசரமாக தீர்ப்பு வழங்குவது குபீர்.
கல்லூரி மாணவர்களாக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலாவின் லொள்ளு தூக்கல். அதுவும் மூர்த்தியின் டபுள் மீனிங் டயலாக்கின்போது கிராபிக்ஸ் காகம் பறந்து வந்து தலையில் கொத்துவது குபீர் ரசனை. முதல் பாதிவரை ரசிக்க முடிந்த நையாண்டித்தனம், இரண்டாம் பாதியில் சில இடங்களில் சலிப்பு. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் கமர்ஷியல் கலர். கண்ணனின் இசையில் பாடல்களும் சிரிக்கும் ரகம். தமிழ்ப் படங்களையெல்லாம் நையாண்டி செய்து, ‘தமிழ்ப் படம்’ தந்திருக்கும் இயக்குனர் அமுதன், தமிழ் சினிமாவிற்கு வரவேற்கப்பட வேண்டியவர்தான்.
தமிழ் படம் நையாண்டி தர்பார்.