
"மானாட மயிலாட' நிகழ்ச்சியின் 5}ம் பகுதியை புதுமையான முறையில் இறக்கப் போகிறது கலைஞர் டி.வி. பெண்கள் அல்லாமல் ஆண்கள் மட்டுமே கலந்து நடனமாடப் போகிறார்களாம். கலா இருந்த இடத்தில் பிருந்தா இருப்பாராம். கழட்டி விடப்பட்ட ரம்பா மீண்டும் நடுவராகிறார். குஷ்பு, நமீதாவுக்கு இடம் இல்லையாம்.
சன் மற்றும் கலைஞர் குழுமங்களைத் தொடர்ந்து, விஜய் டி.வி.க்காக களம் இறங்குகிறார் குஷ்பு. விஜய் டி.வி.க்காக இதுவரை சீரியல்களில் மட்டுமே வந்தவர், இந்த மாத இறுதியில் ஒளிபரப்பைத் தொடங்கும் "அழகிய தமிழ் மகன்' (தமிழகத்தின் சிறந்த மணமகனுக்கான தேடல்) நிகழ்ச்சியை தொகுக்கப் போகிறார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் பின் அவர் கலந்து கொள்ளும் புது நிகழ்ச்சி இது.
"மெட்டி ஒலி' சீரியலுக்குப் பின் "எம்டன் மகன்' உள்ளிட்ட படங்களை இயக்கி சினிமாவுக்கு வந்த திருமுருகன், மீண்டும் சீரியல் இயக்கும் திட்டம் வைத்திருக்கிறாராம். கதை விவாதம், தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்புதல் முடியும் தருவாயில் இருக்கிறது. "மெட்டி ஒலி'யில் நடித்த சிலரை இதிலும் நடிக்க வைக்க பேச்சு நடக்கிறதாம்.