Thursday, February 18, 2010
முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தார் அஜீத்!
முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் நடிகர் அஜீத்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று முதல்வர் அலுவலகம் தரப்பில் தெரி்விக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முதல்வருக்கு சினிமாக்காரர்கள் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய அஜீத், இது போன்ற பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை மிரட்டிக் கூப்பிடுவதாக மேடையிலேயே குற்றம்சாட்டினார்.
உடனே அந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார் ரஜினி. இந்த நிலையில் அஜீத்தின் இந்தப் பேச்சு முதல்வர் வட்டாரத்திலும் திரையுலகிலும் கடும் அதிருப்தியைக் கிளப்பியது.
நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி, பெப்ஸி தலைவர் வி சி குகநாதன், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் அஜீத்தை வெளிப்படையாகவே கண்டித்தனர். மறைமுகமாக ரஜினியையும் விமர்சித்தனர்.
இந்த நிலையில் இன்று ஜாகுவார் தங்கத்தின் காரை அஜீத் ரசிகர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் இன்று காலை கருணாநிதியைச் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். தன் மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்ததாகக் கூறினார். அப்போது அஜீத் பேச்சு பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, அஜீத்தின் துணிச்சலான பேச்சைப் பாராட்டுவதாகவும், ஆனால் அஜீத் சொல்வது போல யாரும் யாரையும் மிரட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
ரஜினி வந்துபோன சிறிது நேரத்தில் முதல்வர் வீட்டுக்கு வந்தார் அஜீத். முதல்வரைச் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு புறப்பட்டுச் சென்றார்.
பாராட்டு விழா மேடையில் தான் பேசியதற்கு விளக்கம் தெரிவிக்கவே அவர் வந்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் மரியாதை நிமித்தமாக அவர் வந்துபோனதாக முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது.