Friday, October 2, 2009

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்

பஸ்ஸில், ரயிலில், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் என்று நான்கைந்து இடங்களில் வெடிகுண்டுகளை வைக்கிறார் கமல். பின்னர் நகரின் மையப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பலமாடிக் கட்டிடத்தின் உச்சிக்கு சென்று அங்கே லேப்டாப், செல்போன், மினி டிவி ஆகியவற்றை செட் செய்து அங்கிருந்து போலீஸ் கமிஷனர் மோகன்லாலை அழைக்கிறார்.

தான் சொல்லும் நான்கு தீவிரவாதிகளை விடு வித்து தான் சொல்லும் இடத்துக்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும், இல்லையேல் குண்டுகல் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுகிறார் கமல். உடனே தீப்பற்றிக்கொண்ட மாதிரி மோகன்லாலின் தலைமையில் ஒரு போலீஸ் டீம் கமலையும் அவர் வைத்திருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டுபிடிக்க அதிரடியாய் இயங்குகிறது.

இருப்பினும் கமலின் புத்திசாலித்தனத்தாலும் போலீஸ்டேசனிலேயே அவர் குண்டு வைத்திருப்பதை பார்த்து நம்பியதாலும் வேறுவழியின்றி அந்த நான்கு தீவிரவாதிகளையும் விடுவித்து இரண்டு போலீஸ் அதிகாரிகளுடன் அனுப்பி வைக்கிறார் மோகன்லால். தீவிரவாதிகள் தப்பித்தார்களா? கமல் பிடிபட்டாரா? கமல் யார் என்பது விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த க்ளைமாக்ஸ்.

தமிழ் சினிமாவின் நிறைய சம்பிரதாயங்களை உடைத்து எறிந்து ஒரு படம் பண்ணியதற்காகவே முதலில் கமலுக்கு ஒரு ராயல் சல்யூட். ஒரே நாளில் நடக்கும் கதை, தேவையில்லாமல் பாடல் காட்சிகள். சண்டைக்காட்சிகள், செண்டிமெண்ட் பிழியல்கள் ஆகியவற்றை தவிர்த்து தமிழ் சினிமா போகவேண்டிய ஒரு புதிய பாதயைக் காட்டியிருக்கிறார்.

கமல் மொட்டைமாடியில் அமர்ந்து நெட்வொர்க் சாதனங்களை செட்டப் செய்யும் காட்சியில் இருந்து பரபரப்பு ஆரம்பித்துவிடுகிறது.க்ளைமாக்ஸில் தீவிரவாதத்தின் பாதிப்பை கண்ணீருடன் அவர் விளக்கும் காட்சி அனைவரையும் நெகிழச் செய்கிறது.

மோகன்லால் நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் மிரட்டுகிறார். உள்துறை செயலாளரான லட்சுமி யுடன் அவர் மோதும் காட்சிகள் கைதட்டலை பெறுகின்றன. அவரும் கமலும் உரையாடும் காட்சிகளில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பது தெரிகிறது.

அதிரடி போலீஸ் அதிகாரிகளாக வரும் கணேஷ்வெங்கட்ராம், பரத்ரெட்டி, பிரேம் மோவரும் கனகச்சிதம். அடிக்கடி புகை பிடிக்கும் பெண் நிருபராக வரும் அனுஜா அய்யர் னம்மை ஆச்சரியப்படவைக்கிறார்.

அறிமுகப் படத்திலேயே பிண்ணனி இசையை கனகச்சிதமாக செதுக்கியிருக் கிறார் ஸ்ருதிஹாசன். கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு ஓகே. தனது முதல் படத்திலேயே நல்ல இயக்குனர் என்ற பாராட்டை பெறுகிறார் இயக்குனர் சக்ரி டொலேடி. குறைகள் என்று பார்த்தால் சொல்லும்படி எதுவும் இல்லை. தவிர எப்போதாவது வரும் ஒரு நல்ல படத்தை குறை சொல்வது என்பது மரபல்ல.

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com